சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்


சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
x

உடுமலை அருகே இறவைப்பாசனத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருப்பூர்

போடிப்பட்டி,

உடுமலை அருகே இறவைப்பாசனத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எண்ணெய் வித்துப்பயிர்கள்

பொதுவாக நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துப்பயிர்கள் சாகுபடி லாபகரமானதாகவே உள்ளது. இதில் குறைந்த மழையளவு உள்ள பகுதிகளிலும் சாகுபடி செய்ய ஏற்ற பயிராக இருந்தாலும் சூரியகாந்தி சாகுபடியில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே ஈடுபட்டு வருகின்றனர். சூரியகாந்தியை இறவைப்பாசனத்தில் மட்டுமல்லாமல் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். ஆடிப்பட்டம் மற்றும் கார்த்திகைப்பட்டங்கள் மானாவாரி சாகுபடி செய்ய ஏற்றது. மேலும் மார்கழி மற்றும் சித்திரைப் பட்டங்கள் இறவைப்பாசனத்துக்கு ஏற்ற பருவங்களாகும். உடுமலை பகுதியில் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அவை பூக்கும் பருவத்தை எட்டியதால் கண்களைக்கவரும் மஞ்சள் வண்ணத்தில் மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது.

பறவைகளால் சேதம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

குறைந்த வேலையாட்கள், குறைந்த பராமரிப்பு என்ற வகையில் சூரியகாந்தி சாகுபடியைத் தேர்வு செய்துள்ளோம். விதைத்த 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். தற்போதுள்ள வீரிய ஒட்டு ரகங்கள் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் போதுமானதாகும். ஒரு ஏக்கருக்கு சராசரியாக 1,000 முதல் 1,100 கிலோ வரை மகசூல் பெற முடியும். அதிக அளவில் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலிருந்துதான் நமது நாட்டுக்கு சூரியகாந்தி விதைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக உக்ரைனிலிருந்து சூரியகாந்தி விதைகள் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சூரியகாந்தி விதைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது விவசாயிகளின் எண்ணமாக உள்ளது. இதனால் இறவைப்பாசனத்தில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதேநேரத்தில் சூரியகாந்தி சாகுபடியைப் பொறுத்தவரை கிளிகள், மயில்கள் உள்ளிட்ட பறவைகளிடமிருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக உள்ளது. விதைகள் முற்றுவதற்கு முன்பாகவே பறவைகள் அதிக அளவில் சேதப்படுத்தி விடுகிறது. குறிப்பாக கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் கிளிகள் மிக அதிக அளவில் சேதப்படுத்துகிறது. எனவே சோலார் மூலம் செயல்படும் வகையிலான ஓசை எழுப்பும் கருவிகளை வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.


Related Tags :
Next Story