பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
பள்ளிகொண்டா அருகே நடைபெற இருக்கும் தி.மு.க. முப்பெரும் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வுசெய்தார்.
தி.மு.க. முப்பெரும் விழா
தி.மு.க. பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பகுதியில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இதற்காக கந்தனேரி பகுதியில் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விழாவில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தி.மு.க. வினர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இந்தநிலையில் கந்தனேரி பகுதியில் விழா நடக்கும் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஆறு வழிச்சாலையின் இருபுறங்களிலும் விழாவுக்கு வருகை தரும் கட்சியினரின் வாகனங்கள் நிறுத்த ஏற்படுத்தப்படும் வசதி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் ஆறு வழிச்சாலையில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவது, அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.