பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

மோர்தானா அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேறுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆய்வு செய்தார்.

வேலூர்

மோர்தானா அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேறுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆய்வு செய்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை வரை வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வெளியேறி வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் செல்கிறது. குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வழியாக கவுண்டன்யாமகாநதி ஆறு செல்வதால் ஆற்றில் வெள்ளம் செல்லும் போதெல்லாம் கெங்கையம்மன் கோவில் தரைபாலம் பாதிக்கப்பட்டு சேதம் அடைகிறது. போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது.

இதனால் காமராஜர் பாலத்தில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுவதால் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டால் நெரிசல் இல்லாமல் சீராக போக்குவரத்து நடைபெற செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நேற்று மாலை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கங்கை அம்மன் கோவில் தரைபாலம் பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

போக்குவரத்து மாற்றம்

அப்போது கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் செல்லும் போது போக்குவரத்தை தடை செய்து காமராஜர் பாலம் வழியாக போக்குவரத்தை அனுமதிப்பது, அப்போது நெரிசல் இல்லாமல் போக்குவரத்து நடைபெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறுவதால் நீர் பாசனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மோர்தானா பகுதியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story