ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி. பேட்டி அளித்தார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரும், பெரம்பலூர் தொகுதியின் எம்.பி.யுமான பாரிவேந்தர் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கற்பகத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு மனுக்களை அளித்தார். அதில், பெரம்பலூர் எம்.பி. உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதி மூலம் கடந்த நிதி ஆண்டிற்கு செய்ய வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அட்டவணையை தயார் செய்து கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சில திட்டங்களுக்கான தொகை மதிப்பீடு போதுமான அளவில் இல்லை என்று கலெக்டரிடம் இருந்து கடிதம் வரப்பெற்றது. திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. அந்த ரூ.71 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் ரூ.50 லட்சத்து 2 ஆயிரத்தை எனது எம்.பி. உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கடந்த நிதி ஆண்டு மூலம் மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் செய்து பணி தொடங்க பரிந்துரை செய்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் பாரிவேந்தர் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், என்னுடைய எம்.பி. நிதி அதிகம் கல்வித்துறைக்கு தான் செலவிடப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் தோழமை கட்சியான இந்திய ஜனநாயக கட்சி. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக தெரிகிறது. எனவே எங்கள் கட்சியும் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளிக்கவுள்ளோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும், என்றார்.