சுப்ரீம் கோர்ட்டு கவர்னருக்கு குட்டு வைத்துள்ளது- அமைச்சர் ரகுபதி


சுப்ரீம் கோர்ட்டு கவர்னருக்கு  குட்டு வைத்துள்ளது- அமைச்சர் ரகுபதி
x

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரே கவர்னரின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கவர்னருக்கு சரமாரியாக கேள்வியை எழுப்பியது. மேலும் கவர்னர் தனது நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கவர்னரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் காட்டமாக விமர்சித்தது.

இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் அமைச்சர் ஆகலாம். அமைச்சர் ஆவதற்கென்று தனி தகுதி எதுவும் தேவையில்லை. அமைச்சர் ஆக முடியாது என்ற தகுதி இழப்பு விதி எதுவும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டாலே ஆவர் அமைச்சராவதற்கு முழு தகுதி பெற்றுவிட்டார்.

அந்த அடிப்படையில் தான் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னரிடம் பரிந்துரை செய்தார். ஆனால், நம் கவர்னர் தான் உலக மேதாவி ஆயிற்றே? சட்ட வல்லுநர்களை கேட்கிறேன் எனக் கூறினார்.

கடைசியாக சுப்ரீம் கோர்ட்டு கவர்னருக்கு குட்டு வைத்துள்ளது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரே கவர்னரின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவில்லை, அவரது செயல்பாடுகள் கவலை அளிக்கிறது என ஒப்புக்கொள்கிறார். இவ்வளவு மோசமான கவர்னரால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? மக்கள் இதையெல்லாம் நிச்சயமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என ரகுபதி தெரிவித்துள்ளார்.


Next Story