திருப்பூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த சுரைக்காய்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று சுரைக்காய் அதிக அளவில் வந்திருந்தது. 15 கிலோ எடை கொண்ட ஒரு பை சுரைக்காய் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வரத்து அதிகரிப்பு
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு சமீப நாட்களாக பெரும்பாலான காய்கறிகளின் வரத்து சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்று சுரைக்காய் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பல்லடம், அவினாசி, தெக்கலூர், பொங்கலூர் மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 5 டன் சுரைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 15 கிலோ எடை கொண்ட ஒரு பை சுரைக்காய் நேற்று ரூ.200 முதல் ரூ.250 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகமாக இருந்தாலும் இதன் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது.
புடலங்காய்
இதேபோல் கடந்த சில நாட்களை விட புடலங்காயின் வரத்தும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று மார்க்கெட்டிற்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் 4 டன் புடலங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒரு கட்டு புடலங்காய் நேற்று ரூ.150 முதல் ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. புடலங்காய் மற்றும் சுரைக்காயின் விலை சற்று அதிகமாக இருந்ததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. இந்த காய்கறிகளின் மொத்த விலை மேற்கண்டவாறு இருந்த நிலையில், சில்லரை விற்பனையில் விலை சற்று அதிகமாக இருந்தது.