சுரண்டை நகராட்சி கூட்டம்


சுரண்டை நகராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

சுரண்டை நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமையில் நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், ஆணையாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், பொறியாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கணக்காளர் முருகன் தீர்மானத்தை வாசித்தார். முதல் தீர்மானமாக சுரண்டையில் எரிவாயு தகனமேடை அமைக்க அரசாணை வழங்கி 6 மாதத்திற்கு மேல் ஆகியும் இடம் தேர்வு செய்ய இயலாத காரணத்தால் அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அதற்கு பதிலளித்து நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் பேசுகையில், 'ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என்பது அனைத்து கவுன்சிலர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் நகராட்சி தேர்வு செய்யும் ஒவ்வொரு இடத்திற்கும் பொதுமக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகிறது. எரிவாயு தகன மேடை அமைப்பது தொடர்பாக தனியாக ஒரு கூட்டம் நடத்தி அனைத்து கவுன்சிலர்களின் கருத்தை கேட்டு முடிவு செய்யப்படும். குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் விரைவாக நடக்க ஏற்பாடு செய்யப்படும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும், கிணறுகளை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எரிவாயு தகன மேடை ரத்து தவிர மற்ற தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது' என்று கூறினார்.


Next Story