விராலிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
விராலிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.
விராலிமலையில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழாவானது கடந்த 25-ந்தேதி கணபதி ஹோமம் மற்றும் முருகன் சமேத வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளைகளிலும் நாகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருக பெருமான் சமேத வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அதனையொட்டி காலையில் மலை மேல் உள்ள முருகனுக்கு தங்க கேடயம் சாற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மனிடம் முருக பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், அதன் பின்னர் மாலை 6 மணி அளவில் சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளித்தல் (சூரசம்ஹாரம்) நிகழ்ச்சியும் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சியானது நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் பக்தர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.