தென்காசி புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ்குமார் பொறுப்பேற்பு
தென்காசி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ்குமார் நேற்று பொறுப்பேற்றார்.
புதிய சூப்பிரண்டு
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சாம்சன் சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவாரூர் மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றிய சுரேஷ்குமார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் புதிய போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இன்று (அதாவது நேற்று) பொறுப்பேற்றுக் கொண்டேன். நான் ஏற்கனவே நெல்லையில் பணியாற்றியுள்ளேன். சட்டம், ஒழுங்கிற்கு முன்னுரிமை கொடுத்து அதனை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பல்வேறு வகையான பொதுமக்கள் இங்கு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், குற்றங்களை தடுக்கும் வகையிலும் காவல்துறை சிறப்பாக செயல்படும்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஒன்று குற்றங்களை தடுப்பது. மற்றொன்று நடைபெற்ற குற்றங்களை கண்டுபிடிப்பது. இந்த இரண்டிலும் அதிகமாக கவனம் செலுத்தி போலீசார் பணியாற்றுவார்கள். மேலும் கேரள மாநிலத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதை கண்டுபிடித்து அவர்கள் அதை எங்கு வாங்கினார்கள்? எங்கு விற்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறையும், காவல்துறையும் இணைந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிக்கு வெளியே போதைப் பொருள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.