"தமிழகத்தில் 4 மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கைக் குழு அமைக்கப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் 4 மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கைக் குழு அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

அறுவை சிகிச்சையின் போது கையாளப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் தவறான சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்ததைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கான நெறிமுறைகள், பாதுகாப்பான அறுவை சிகிச்சைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் அறுவை சிகிச்சை நெறிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது. அதில், அறுவை சிகிச்சையின் போது கையாளப்பட வேண்டிய விதிமுறைகள், உலக சுகாதார நிறுவனம் போன்ற பல்வேறு உயர் அமைப்புகளின் அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. இவை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய 4 மண்டலங்களில் அறுவை சிகிச்சைகளில் ஏற்படுகின்ற இறப்புகள் குறித்து தணிக்கை முறை செய்யும் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழுக்களில் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ நிபுணர், மயக்கவியல் நிபுணர், எலும்பு சிகிச்சை நிபுணர் என்று 4 உயர் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் இடம் பெறுவார்கள்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Next Story