அரசு உதவிபெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை நடப்பாண்டில் இடமாற்றம் செய்யவேண்டாம் - கல்வித்துறை உத்தரவு


அரசு உதவிபெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை நடப்பாண்டில் இடமாற்றம் செய்யவேண்டாம் - கல்வித்துறை உத்தரவு
x

அரசு உதவிபெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை நடப்பாண்டில் இடமாற்றம் செய்யவேண்டாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை, தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணிபுரிவதற்கு இடமாற்றம் செய்யப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் கல்வியாண்டின் இடையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவும் பிறப்பித்தது.

இந்த உத்தரவை பின்பற்றி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசுப்பள்ளிகளில் பணிபுரிய செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நடைமுறை குறித்த வழக்கு ஒன்றில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணிபுரிய பணிக்கப்படும் நடைமுறையை வரவேற்ற சென்னை ஐகோர்ட்டு, கல்வியாண்டின் இடையில் மாற்றம் செய்யவேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களை இந்த கல்வியாண்டில் இடமாற்றம் செய்யவேண்டாம். அடுத்த கல்வியாண்டின்(2023-24) ஜூன் முதல் தேதியில் இருந்து பணிபுரியுமாறு ஆணை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story