அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை


அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
x

அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியை தாண்டியதால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கரூர்,

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் சுமார் 54,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. இதே போல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து தூவானம், பாம்பாறு, தேனாறு, சின்னாறு, ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இன்று இரவு 7 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 88. 13 அடியை தாண்டியது. வினாடிக்கு 2215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அணையின் நலன் கருதி அணைக்கு உள்ளே வரும் தண்ணீரை அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. அணையில் தற்போது 3879 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

இதனால் கரூர் மாவட்ட கரையோர மக்கள் எந்த நேரமும் பாதுகாப்பாக இருக்கும் படி கரூர் மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story