இறைச்சி கடைகளில் திடீர் சோதனை: 27 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
நெல்லையில் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் 27 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.
நெல்லையில் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் 27 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.
பிளாஸ்டிக் பைகள்
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. குறிப்பாக நெல்லை மண்டல பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் மீன், இறைச்சி கடைகளில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதையடுத்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நேற்று நெல்லை டவுன் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்கள் 2 பேட்டரி வாகனங்கள் மூலம் குற்றாலம் ரோடு, சேரன்மாதேவி ரோடு, வழுக்கோடை பகுதி, தொண்டர் சன்னதி பகுதிகளில் உள்ள சுமார் 36 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
27 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
அப்போது 26 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து, ஒவ்வொரு கடைக்காரருக்கும் தலா ரூ.100 வீதம் 26 கடைகளுக்கு மொத்தம் ரூ.2,600 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. மொத்தம் 27 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள்பை பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பாத்திரங்களுடன் இறைச்சி கடைகளுக்கு சென்று இறைச்சி வாங்கி வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.