சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் ஆவணி கொடை விழா
சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் ஆவணி கொடை விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
வள்ளியூர்:
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சுடலை கோவில்களில் சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கொடை விழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆவணி மாத 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆவணி கொடை விழா கடந்த 25-ந்தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று மாலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அண்ணாமலை குருக்கள் நடத்தினார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கொடை விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பிள்ளையார் கோவில் மற்றும் அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுடலை ஆண்டவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இரவு 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை பூஜையும், அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி மயானம் சென்று வந்து சாமபடைப்பு பூஜையும் நடக்கிறது. சிறப்பு கலை நிகழ்ச்சியாக சுடலை ஆண்டவர் கலையரங்கத்தில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் வழங்கும் திரைப்பட இன்னிசைக் கச்சேரி நடக்கிறது. பின்னர் கோவிந்தராஜ் குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சி நடக்கிறது. காமராஜர் கலையரங்கத்தில் குடும்ப முன்னேற்றத்திற்கு காரணம் ஆண்களின் சம்பாத்தியமா? பெண்களின் சாமர்த்தியமா? என்ற தலைப்பில் இசை பட்டிமன்றம் நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பொங்கல் வழிபாட்டுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் சிறுமளஞ்சி இந்து நாடார் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.