ரூ.46 லட்சத்தில் 116 இடங்களில் கண்காணிப்பு கேமரா
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.46 லட்சத்தில் 116 இடங்களில் கண்காணிப்பு கேமரா ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் விமலா முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி வரவேற்றார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் பிடிப்பு பகுதிகளில் மணல் மூட்டைகள், பொக்லைன் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது, வடிகால் வாய்க்கால்களில் தேங்கி உள்ள குப்பை கழிவுகளை அகற்றி, தண்ணீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்றவேண்டும், மழையால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 46 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 70 பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் 46 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரூ.46 லட்சத்து 600 நிதி ஒதுக்கீடு செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.