கண்காணிப்பு கேமரா, சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள்; போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்


கண்காணிப்பு கேமரா, சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள்; போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-02T00:16:31+05:30)

தூத்துக்குடியில் கண்காணிப்பு கேமரா, சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பொதுமக்களிடையே வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிரா பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "மூன்றாம் கண்" என்ற குறும்படமும், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "அல்வா" என்ற குறும்படமும் எடுக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று வெளியிட்டு பேசினார்.

அப்போது, குறும்படங்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம் ஆகும். ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிச்சயமாக தெரிந்து இருக்க வேண்டும். அப்படி தெரிந்து இருந்தால், அவர் குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டார். ஒவ்வொருவரும் அன்புடனும், சகோதரத்துவத்துடனும் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமரா மூலம் குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்கவும், குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்கவும் முடிகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story