கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானது

வீரசோழன் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானது.
காரியாபட்டி,
வீரசோழன் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானது.
டாஸ்மாக் கடை
நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விடத்தக்குளம் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் பாலகிருஷ்ணன் விற்பனையாளர்களாகவும், திருச்சுழி பகுதியை சேர்ந்த இருளாண்டி சூப்பர்வைசராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 27-ந் தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கினர்.
பின்னர் கடையினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை மூடைகளாக கட்டி தூக்கிக்கொண்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது இரவு நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வீரசோழன் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அங்கு வருவதை கண்டதும் அந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் திருடிய மதுபான பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மதுபான திருட்டில் ஈடுபடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி குறித்து கேமராவில் பதிவானதை வைத்து வீரசோழன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சுழியில் டாஸ்மாக் கடையில் ஆயுதங்களால் ஊழியர்களை தாக்கி விட்டு ரூ.6 லட்சம் கொள்ளை, அதற்கு முன்பாக ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளை, அ.முக்குளம் அரசு டாஸ்மாக் கடையில் பெட்டி, பெட்டியாக மதுபான பாட்டில்கள் திருட்டு, தற்போது வீரசோழன் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி என திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை குறி வைத்து திருட்டு, கொள்ளை, ஊழியர்களிடம் வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






