கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
ஆனைமலை,
ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இறைச்சி கழிவுகள்
ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். அதன்படி தினமும் 6 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரமாகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆனைமலை ஆற்றங்கரை ஓரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் சிலர் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகள் மற்றும் ஓட்டல் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்றங்கரையில் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் ஆற்று நீர் மாசுபடும் அபாயம் உள்ளது. ஆற்றில் செல்லும் தண்ணீர் விவசாயத்துக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.
கண்காணிப்பு கேமராக்கள்
இதற்கிடையே ஆற்றுப்பகுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரவு நேரத்தில் காவலாளி நியமிக்கப்பட்டார். இதனால் கழிவுகள் கொட்டுவது ஓரளவு தடுக்கப்பட்டது. இருப்பினும், முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆனைமலையில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் கூறும்போது, ஆனைமலை பேரூராட்சியில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதை மீறி ஆற்றங்கரையில் கழிவுகளை வீசினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்றார்.