வறட்சியால் பாதித்த பகுதியை வேளாண் அதிகாரி ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு 82 ஆயிரத்து 84 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றது. மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, கண்ணங்குடி மற்றும் காளையார்கோவில் வட்டாரங்களில் மழை குறைவு காரணமாக சில பகுதிகளில் நெற்பயிர் வறட்சியினால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் வறட்சியினால் பாதிக்கப்பட்ட ஆந்தக்குடி, சக்கந்தி மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவரிடம் அந்த பகுதி விவசாயிகள், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரத்துக் கால்வாய் சுத்தம் செய்தல், உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், சமுதாயக் கிணறு அமைத்தல் போன்றவைகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பாதிப்பின் அளவு
இதை தொடர்ந்து வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துரை கூறியதாவது:-
தேவகோட்டை வட்டாரத்தில் இந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள 13,152 எக்டேர் பரப்பளவில் வறட்சியின் காரணமாக 6,782 எக்டோ் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இளையான்குடி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 18,881 எக்டேர் பரப்பளவில் வறட்சியின் காரணமாக 11,787 எக்ேடர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களின் பரப்பளவினை விரைவாகவும் துல்லியமாகவும் கணக்கெடுத்து உரிய காலத்திற்குள் அறிக்கை அனுப்பி விடுமாறு வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேண்டுகோள்
மேலும் குறைவான நீரில் வளரக் கூடிய தானியங்கள் மற்றும் உளுந்து ஆகியவற்றை சாகுபடி செய்திடுமாறும், அதற்குத் தேவையான விதைகள் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு உள்ளதாகவும் அதனை விவசாயிகள் பயன்படுத்தி லாபம் அடைந்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், வேளாண்மை துணை இயக்குனா்கள் பன்னீர்செல்வம், கதிரேசன், வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.