தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு-தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை


தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு-தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை
x

மதுரையில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டு அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

மதுரை


மதுரையில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டு அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

தரமற்ற விதைகள்

இது குறித்து, மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வாசுகி கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சென்னை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனரின் அறிவுரையின்படி, விவசாய பெருமக்களின் விதை தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், நல்ல தரமான விதைகள் மட்டுமே விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையிலும் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர் ராஜபாண்டி உள்ளிட்ட குழுவால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், மதுரை மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது விதை விற்பனை நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், விதை இருப்பு, விதை கிட்டங்கிகளின் சுத்தத்தன்மை, விதை கொள்முதல் பட்டியல்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை பட்டியல்கள், விலை பட்டியல்கள், முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கைகள், விற்பனை அனுமதிச்சான்று நகல்கள், விதை விற்பனை உரிமங்கள் போன்ற அனைத்து காரணிகளும் கூர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.

தடை விதிப்பு

இந்த ஆய்வின் முடிவில், விதை முளைப்புத்திறன் சோதனையில் தேர்ச்சிபெறாத விதைக்குவியல்கள், விற்பனை அனுமதிச்சான்று இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த விதைக்குவியல்கள் என ரூ.7 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 14.201 மெட்ரிக் டன் விதைகளுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களிலிருந்து மட்டுமே வாங்க வேண்டும். விதைகள் வாங்கும் போது விற்பனை. பட்டியல் கேட்டுப் பெற வேண்டும்.காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story