பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை கணக்கெடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்


பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை கணக்கெடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
x

பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை கணக்கெடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம்

ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், குவாரி குழிகள் மற்றும் செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளுக்காக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழக தலைமை செயலாளர் கடிதத்தில் தெரிவித்தவாறு, பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கான முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பயன்பாட்டில் இல்லாத குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களை தடுத்திடவும், கட்டுமான பள்ளங்கள் மற்றும் அகழிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, குறிப்பாக நெடுஞ்சாலைகளில் கட்டுமான குழிகள் மற்றும் அகழிகளால் ஏற்படும் விபத்துகளை தடுத்திடவும், பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க ஆபாயகரமான இடங்களுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடுடவும் அறிவுறுத்தப்பட்டது.

புகைப்படத்துடன் தெரிவிக்கலாம்

மேலும், மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் செயல்பாட்டில் இல்லாத குவாரி குழிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், குவாரி குழிகள் மற்றும் செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் 9384056227 என்ற செல்போன் எண் வாயிலாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் புகைப்படத்துடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ரம்யா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. சரவணக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story