கேமராக்கள் பொருத்தி வாகனங்கள் கணக்கெடுப்பு
சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கேமராக்கள் பொருத்தி வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கேமராக்கள் பொருத்தி வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வால்பாறை சாலை
பொள்ளாச்சி-வால்பாறை சாலை மலைப்பகுதிகள் வழியாக செல்கிறது. இந்த சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வால்பாறை சுற்றுலா தலமாக விளங்குவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். இதை தவிர கேரளா மாநிலம் சாலக்குடி அதிரபள்ளி நீர்வீழ்ச்சிக்கும் இந்த வழியாக பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இதன் காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான கார், வேன் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் வால்பாறை சாலையில் உட்கமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கேமராக்கள் மூலம் தானியங்கி கணக்கெடுப்பு
பொள்ளாச்சி-வால்பாறை சாலை 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. குரங்கு நீர்வீழ்ச்சியை தாண்டிய பிறகு கொண்டை ஊசி வளைவுகள் தொடங்குகிறது. இந்த சாலையில் ஏற்கனவே விபத்துக்களை தடுக்கும் வகையிலும், போக்குவரத்தை மேம்படுத்த தேவையான இடங்களில் சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மண் சரிவை தடுக்க தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன.
இதற்கிடையில் மேலும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து வந்த தனியார் நிறுவனத்தினர் மூலம் வால்பாறை சாலையில் ஆழியாறு, அட்டகட்டி ஆகிய 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இதற்காக கேமராக்களை தானியங்கி முறையில் மோட்டார் சைக்கிள், கார், பஸ் என எந்த வகையான வாகனங்கள் வால்பாறை சாலை வழியாக செல்கிறது என்று 7 நாட்கள் கணக்கெடுக்கப்பட்டது.
உயர் அதிகாரிகள் குழு
வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்று வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு சாலைகள் மேம்படுத்தப்படும். அதன்படி வால்பாறை சாலையிலும் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டது.
கணக்கெடுப்பு விவரங்களை தனியார் நிறுவனத்தினர் அரசுக்கு வழங்குவார்கள். அதன்பிறகு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து, சாலையை மேலும் அகலப்படுத்துவது போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.