மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு
மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று தெற்கு வட்டார அளவிலான கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று தெற்கு வட்டார அளவிலான கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாற்றுத்திறன் மாணவர்களை கணக்கெடுத்தல்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உள்ளடக்கிய பொள்ளாச்சி தெற்கு வட்டார அளவிலான குழு கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர்கள் பூம்பாவை, கிளோரி ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிதல், பள்ளியில் சேர்த்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) காயத்ரி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
மாற்றுத்திறன் உள்ள மாணவ-மாணவிகளை கண்டறிய வேண்டும். இதற்கான கணக்கெடுப்பு பணியை கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் உதவியோடு மேற்கொள்ள வேண்டும். கண்டறியப்படும் பள்ளிச்செல்லா மாணவர்களை அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.
மருத்துவ முகாம்
பள்ளிகளில் மற்ற மாணவ-மாணவிகளுடன் மாற்றுத்திறனாளி மாணவர்களை சமமாக கருத வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமை இறைவணக்கத்தின் போது உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் பேசுவதற்கு ஒரு மொழி உள்ளது. இதுகுறித்து பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிவதில்லை.
இதற்கான அரசு மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மொழி அடங்கிய நோட்டீசு வெளியிட்டு உள்ளது. இந்த நோட்டீசு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. எனவே அதை பார்த்து மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் பேசலாம். இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்குள் அடையாள அட்டை பெறுதல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து வட்டார குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.