கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் சர்வே பணி -தமிழக அரசு உத்தரவு
அதிகரிக்கும் நில உட்பிரிவு பட்டா விண்ணப்பங்கள்: கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் சர்வே பணி -தமிழக அரசு உத்தரவு.
சென்னை,
தமிழகத்தில் ஆன்லைன் பட்டா வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. நில உட்பிரிவு பட்டா மாறுதல் தொடர்பாக வரும் விண்ணப்பங்களை (ஓபிடி-ஐஎஸ்டி) கையாளவும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அனைத்து சர்வே மற்றும் செட்டில்மெண்ட் துணை இயக்குனர்களுக்கும் இயக்குனர் டி.ஜி.வினய் கடிதம் எழுதியுள்ளார். அதில், நில உட்பிரிவு பட்டா கேட்டு ஆண்டுக்கு 60 விண்ணப்பங்கள் வரும் அனைத்து ஊரகப் பகுதிகளில் உள்ள ஓபிடி-ஐஎஸ்டி விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, நில உட்பிரிவு பட்டா விவகாரங்களில் சர்வே பணியை கிராம நிர்வாக அலுவலர்களும் மேற்கொள்வார்கள். எனவே நில உட்பிரிவு பட்டாவுக்காக கொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.