15 வினாடி தாமதத்துக்கு என்ஜின் ஆய்வாளர் சஸ்பெண்டு


15 வினாடி தாமதத்துக்கு என்ஜின் ஆய்வாளர் சஸ்பெண்டு
x

மதுரை-காசி தனியார் ரெயில் 15 வினாடிகள் தாமதமாக புறப்பட்டதற்காக என்ஜின் ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் ரெயில்வே தொழிற்சங்கங்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை


மதுரை-காசி தனியார் ரெயில் 15 வினாடிகள் தாமதமாக புறப்பட்டதற்காக என்ஜின் ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் ரெயில்வே தொழிற்சங்கங்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 வினாடிகள் தாமதம்

மதுரையில் இருந்து காசிக்கு தனியார் சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் முதலில் மதியம் 12.20 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அமைச்சர்களின் நிகழ்ச்சி நிரலில் மதியம் 12.25 மணி முதல் 12.27 மணிக்குள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ரெயில் இயக்க நேர குழப்பத்தால் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்து, ரெயில்வே தொழிற்சங்கங்களின் தரப்பில் கூறும்போது, மதுரையில் இருந்து தனியார் மூலம் நேற்று காசிக்கு இயக்கப்பட்ட ரெயில் புறப்படும் நேரத்தில் ரெயில்வே அதிகாரிகள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினர்.

இந்த ரெயிலை டெல்லியில் இருந்து ரெயில்வே இணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்த பின்னர் தான் ரெயிலை இயக்க முடியும். இதற்கிடையே, ரெயில் புறப்படும் நேர குழப்பத்தில், நேற்று மதியம் 12.10 மணிக்கு அமைச்சர்கள் கொடியசைக்க ரெயில் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்றது.

பணிநீக்கம்

ஆனால் 15 நொடிகள் காலதாமதமாக இயக்கப்பட்டதாக தலைமை என்ஜின் ஆய்வாளர், ரெயில் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையம் அடைந்த போது, முதன்மை என்ஜின் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. என்ஜின் டிரைவர் மற்றும் உதவி டிரைவர் ஆகியோருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

என்ஜினை சரியாக சோதனை செய்யாமல் கவனக்குறைவாக இருந்ததால், ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தண்டனை விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பிரேக் பைண்டிங் எனப்படும் வழக்கமாக ஏற்படும் சாதாரண தொழில்நுட்ப பிரச்சினை தான் இந்த ரெயிலில் ஏற்பட்டது.

தண்டனை ரத்து

இதனை 15 வினாடிகளில் சரி செய்து இயக்கியதற்காக பாராட்டுவதற்கு பதிலாக தண்டனை வழங்குவது நியாயமில்லை. என்ஜின் கோளாறாக இருந்திருந்தால் ரெயிலை இயக்கி இருக்க முடியாது. பொதுவாக புதிய ரெயில்கள் இயக்கும்போது என்ஜின் ஆய்வாளர்கள் டிரைவர்களுடன் செல்வது வழக்கம். ஆனால், நேற்றைய ரெயில் இயக்கத்தின் போது, பணி ஒதுக்கப்பட்ட ஆய்வாளர் வரவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஆய்வாளர் பணிக்கு வந்துள்ளார். நிர்வாகத்தின் தவறான நடவடிக்கைக்கு என்ஜின் ஆய்வாளரை சஸ்பெண்டு செய்வது ஏற்புடையதில்லை. எனவே, இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Next Story