பி.ஆயிபாளையத்தில் பணம் கையாடல்:ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்
நாமக்கல்:
பி.ஆயிபாளையம் ஊராட்சியில் துணைத்தலைவரின் கையெழுத்தை மோசடியாக பதிவு செய்து, பணம் கையாடல் செய்த செயலாளர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பணம் கையாடல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்குட்பட்டது பி.ஆயிபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக சத்யா என்பவர் பதவி வகித்து வருகிறார். செயலாளராக அண்ணாதுரை உள்ளார். இதனிடையே ஊராட்சி துணைத்தலைவர் சத்யாவின் கையெழுத்தை ஆவணங்களில் போலியாக பதிவு செய்து பணம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
மேலும் இதுதொடர்பாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சத்யா, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் தனது கையெழுத்தை மோசடியாக பதிவு செய்து, ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை பணம் கையாடல் செய்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
பணி இடைநீக்கம்
இந்த புகார் மனு குறித்து உரிய விசாரணை நடத்த கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார். அதன்பேரில் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பி.ஆயிபாளையம் ஊராட்சியில் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா ஊராட்சி செயலாளர் அண்ணாதுரையை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.