மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.
ஓசூர்:
ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
ரவுடி வெட்டிக்கொலை
ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் திலக் (வயது 24). பிரபல ரவுடியான இவர் கடந்த 12-ந் தேதி ஓசூர் பெரியார் நகர் டீக்கடை பகுதியில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திலக்கை வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கொலை செய்யப்பட்ட திலக் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கடந்த 1.1.2022 அன்று சொப்பட்டியை சேர்ந்த மோகன்பாபு என்பவரை கொலை செய்ததும், அந்த வழக்கில் திலக் உள்பட 6 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் தான் திலக் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மோகன்பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை ஓசூர் டவுன் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் தனது மகன் மோகன்பாபுவை கொலை செய்ததற்கு பழிக்குபழி வாங்குவதற்காக தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் திலக்கை கொலை செய்ததாக கூறி உள்ளார்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த திலக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், அவரை போலீசார் கண்காணிக்காமல் விட்டு விட்டதால் இந்த கொலை நடந்ததாக மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.