நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல - கி.வீரமணி கண்டனம்
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்றே கூறப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல, அவர்களது பேச்சுரிமை, கருத்துரிமையை பறிப்பது எந்த வகையிலும் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.
இப்போதுள்ள இரண்டாம் முறை பிரதமர் மோடி ஆட்சி, அதிகப் பெரும்பான்மை பெற்றதன் காரணமாக ஜனநாயக உரிமைகள் நாளும் பறிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டம் அளித்த உறுதிமொழிகள் பறிபோகும் பரிதாபம் ஏற்பட்டு வருகிறது.
3 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் துணை சபாநாயகர் பதவி இன்னமும் காலியாகவே இருக்கிறது. மரபு முறைப்படி எதிர்க்கட்சியினருக்கு அளிக்கப்பட்டு வரும் முறைக்கும் விடை கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்கள் பலரும் இத்தொடர் நிகழ்வில் ஒரு வாரம் கலந்துகொள்ளக்கூடாது என்று இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்பதால், அம்முடிவினை மறுபரிசீலனை செய்து, ஜனநாயகம் நிலைநாட்டி, சர்வாதிகாரம் கொடியேற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அனைத்து மக்களின் கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.