இரவு நேர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்


இரவு நேர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்
x

சுல்தான்பேட்டை, வால்பாறை பகுதிகளில் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாக சப்-கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

சுல்தான்பேட்டை, வால்பாறை பகுதிகளில் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாக சப்-கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

ஆம்புலன்ஸ் சேவை

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை, டாப்சிலிப், வால்பாறை அரசு ஆஸ்பத்திரி, சோலையார் நகர் உள்பட 14 இடங்களில் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி தினமும் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவையை நிறுத்தி வைத்து உள்ளனர். பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்படுவதால் தொலைதூரங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டிய உள்ளது. இதனால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

கழிப்பிட வசதி

எனவே தமிழக மக்களின் உயிர் காக்கும் உன்னத திட்டம் மக்களின் ஆபத்து காலத்தில் உதவுவதற்கு உருவாக்கப்பட்டது. எனவே கோவை மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவைகளை 24 மணி நேரமும் இயக்க வேண்டும். சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்களை அந்தந்த பகுதிகளிலேயே இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பெத்தநாயக்கனூர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கும், ஊழியருக்கும் கழிப்பட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோன்று வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.


Next Story