வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரின் அதிகாரங்கள் நிறுத்திவைப்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை


வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரின் அதிகாரங்கள் நிறுத்திவைப்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை
x

வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரின் அதிகாரங்கள் நிறுத்தி வைத்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் நடவடிக்கை மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

புகார் மனு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள வைப்பூர் ஊராட்சியில் வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவராக சுமதி என்பவர் பதவி வகித்து வந்தார். துணைத்தலைவராக பாரதி என்பவர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் புகார் மனு அளித்திருந்தனர். புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின் பேரில் புகார் தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரம் நிறுத்தி வைப்பு

அதன் அடிப்படையில் வைப்பூர் ஊராட்சியின் கணக்குகளை தற்காலிகமாக முடக்கம் செய்ய உத்தரவிட்டு பொதுமக்களின் நலன் கருதியும், நிர்வாக காரணங்களுக்காகவும் மறு உத்தரவு வரும் வரை ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் பண பரிவர்த்தனை செய்யும் அதிகாரம், டிஜிட்டல் கையொப்ப அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை செய்தல் கட்டிட வரைபட அனுமதி வழங்குவது மற்றும் ஆணை உரிமம் அனுமதி உள்ளிட்ட அதிகாரங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஊராட்சியில் பணியாளர்கள் ஊதியம், அத்தியாவசிய செலவினங்கள் மற்றும் வரைபட அனுமதி வழங்குதல் ஆகிய இனங்களின் அதிகாரங்களை தற்காலிகமாக குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்மந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story