ஏத்தாப்பூரில்கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர் பணி இடைநீக்கம்மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை


ஏத்தாப்பூரில்கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர் பணி இடைநீக்கம்மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை
x
சேலம்

சேலம்

ஏத்தாப்பூரில் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளரை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

மதுபான கடைகளில் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் குப்புசாமி தலைமையில் அலுவலர்கள் நேற்று வாழப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் ஆய்வு நடத்தினர்.

அப்போது கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒரு விற்பனையாளருக்கு அபராதமும், மற்றொரு விற்பனையாளர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.

இது குறித்து மாவட்ட மேலாளர் குப்புசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பணி இடைநீக்கம்

கடந்த 15 நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு மதுபான கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 20 கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆத்தூர் நரசிங்கபுரத்தில் உள்ள ஒரு கடையில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஒரு பாட்டிலுக்கு ரூ.5 கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அந்த கடை விற்பனையாளருக்கு ரூ.5,750 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று ஏத்தாப்பூரில் உள்ள ஒரு கடையில் ஆய்வு நடத்திய போது அந்த கடையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை விற்பனையாளர் கலியமூர்த்தி என்பவர் கலெக்டர் கார்மேகம் உத்தரவின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் கடையில் விலைப்பட்டியல் வைக்கவும், குறித்த நேரத்தில் கடையை திறந்து, மூடவும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story