அரசு டாக்டர் பணி இடைநீக்கம்


அரசு டாக்டர் பணி இடைநீக்கம்
x

போலியான சாதி சான்றிதழ் கொடுத்து மருத்துவம் பயின்றதோடு, அரசு பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில் அரசு டாக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல்

போலி சாதி சான்றிதழ்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 59). இவர், நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை டாக்டராக பணியாற்றியதோடு, வட்டார மருத்துவ அலுவலராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவர் 1988-ம் ஆண்டு அரசு பணியாளர் தேர்வாைணயம் மூலமாக சுகாதாரத் துறையில் டாக்டர் பணியில் சேர்ந்தார்.

அப்போது, தேர்வாணையத்திடம் பழங்குடியின சாதி சான்றிதழை சமர்ப்பித்ததோடு, தான் பழங்குடியினத்தவர் என வாக்குமூலமும் அளித்துள்ளார். ஆனால் டாக்டர் ராஜேந்திரன் சமர்ப்பித்த பழங்குடியின சான்றிதழ் போலியானது என்பது பின்னர் தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் உரிய ஆதாரங்களை சேலம் சிறப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சமர்ப்பித்ததன் அடிப்படையில், ராஜேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பணி இடைநீக்கம்

இருப்பினும் டாக்டர் ராஜேந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்தது. அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் பேரில், கடந்த ஜனவரி மாதம் டாக்டர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. மேலும் தீர்ப்பை அமல்படுத்தி நடவடிக்கை எடுக்க கோரி பழங்குடி அமைப்பினரும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

அதன்பிறகு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, டாக்டர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க பொது சுகாதார துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அரசு டாக்டர் ராஜேந்திரனை பணி இடைநீக்கம் செய்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உத்தரவிட்டார்.


Next Story