போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x

நாமக்கல் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

நாமக்கல்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 43). இவரது மனைவி பருவதம். இவர்கள் மீது நிலத்தகராறு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பரமத்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார்.

இது தொடர்பாக பருவதத்தின் சகோதரர் ஈரோட்டை சேர்ந்த வேலுச்சாமி, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரூ.5 ஆயிரம் தருவதாக கூறினார். ஆனால் பின்னர் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத அவர் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே வேலுச்சாமி, ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பணி இடைநீக்கம்

பின்னர் அவரை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து லஞ்ச வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை பணி இடைநீக்கம் செய்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கலைசெல்வன் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story