சுவாமி-அம்மன் திருக்கல்யாணம்


சுவாமி-அம்மன் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு, பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 12-ம் திருநாளையொட்டி சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையொட்டி சினேக வல்லியம்மன் கோவிலில் இருந்து வர்ண தீர்த்த மேல்கரையில் உள்ள 6-ம் மண்டகப்படி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அம்மனுக்கு சப்தகன்னிகா பூஜையும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. சுவாமி, அம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் பரிவார தெய்வங்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில் காட்சியளித்தனர். சிவாச்சாரியார்களால் யாக வேள்விகள் நடைபெற்று, மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சுவாமியின் கையில் இருந்த மஞ்சள் கயிறு தாலியை எடுத்து அம்மனுக்கு அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பூஜைகளை வைரமணி குருக்கள், சவுந்தர தியாகராஜன் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, மொய் எழுதி விருந்து சாப்பிட்டனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், மண்டகப்படிதாரர்களான தேவகோட்டை இரட்டை அரு.அரு.குடும்பத்தினர், நாட்டார்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாலையில் சுவாமி, அம்மன் திருமண கோலத்தில் யானை வாகனத்தில் வீதி உலா சென்று அருள் பாலித்தனர்.

1 More update

Next Story