கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம்; மானூரில் நாளை நடக்கிறது
ஆவணி மூல திருவிழாவில் கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் மானூரில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
மானூர்:
ஆவணி மூல திருவிழாவில் கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் மானூரில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
ஆவணி மூல திருவிழா
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூல திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.
தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர்.
இவர் ஒருசமயம், நெல்லையப்பர் கோவில் முன்பாக வந்து வேண்டி அழைக்கவே, இறைவன் பதில் தராததால் சினமடைந்த சித்தர், "ஈசன் இங்கு இல்லை. எருக்கும், குறுக்கும் எழுக" என சாபமிட்டு விட்டு மானூர் செல்ல முற்பட்டார். இதனையறிந்த நெல்லையப்பர், சிவத்தொண்டராக வேடம் தாங்கி சித்தரை தடுத்து, பணிந்து அழைத்தார். அந்த இடமே தற்போதும் தொண்டர் நயினார் கோவில் எனப்படுகிறது.
சாப விமோசனம்
சிவத்தொண்டரிடம் மறுத்துக்கூறி, தொடர்ந்து சித்தர் மானூர் வந்து சேருகிறார். இதனால் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் முறையே, சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி, பாண்டியராஜன், அகத்தியர், குங்கிலியநாயனார், தாமிரபரணி மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் மானூர் சென்று, அங்குள்ள அம்பலவாணர் கோவிலில் வைத்து ஜோதிமயமாய் காட்சியளித்து, சித்தரின் கோபத்தை தணியச்செய்கின்றனர்.
பின்னர், கருவூர் சித்தரையும் உடனழைத்துக்கொண்டு அனைவரும் நெல்லைக்கு வருகின்றனர். தொண்டர் சன்னதி வந்ததும் சித்தர், "ஈசன் இங்கு உளன். எருக்கும், குறுக்கும் அருக" என சாப விமோசனம் வழங்குகிறார்.
இந்நிகழ்வுகள் ஆவணி மாதம் மூலம் நட்சத்திர நாளில் நடைபெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல திருவிழாவாக மானூர் அம்பலவாணர் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மானூர் வந்து வழிபடுவோருக்கு, முக்தியும் கிடைக்கும். மூலநோயும் தீரும் என்பது ஐதீகம்.
கருவூர் சித்தருக்கு காட்சி
இந்த ஆண்டு ஆவணிமூல திருவிழாவானது, நெல்லையப்பர் கோவிலில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
9-ம் திருநாளான நேற்று கருவூர் சித்தர், நெல்லையிலுள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து இன்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவாரங்களுடன் வீதியுலா வந்து, நள்ளிரவு புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) அதிகாலை மானூர் வருகின்றனர். அங்கு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சி அளிக்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் பரமசிவன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.