இனிப்பு, கார வகைகளை உரிமம் பெற்று வினியோகிக்க வேண்டும்


இனிப்பு, கார வகைகளை உரிமம் பெற்று வினியோகிக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Oct 2022 6:45 PM GMT (Updated: 17 Oct 2022 6:45 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகளை உரிமம் பெற்று வினியோகிக்க வேண்டும் என தற்காலிக சுவீட் கடை விற்பனையாளர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்

கடலூர்

கடலூர்

தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகை பண்டங்களுக்கு தீபாவளி சீட்டு நடத்துபவர்கள், தற்காலிக சுவீட் கடைகள் உள்பட அனைத்து இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் அல்லது பதிவு சான்றுகள் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.

இனிப்பு மற்றும் அடுமனை பொருட்களை தயாரித்து விற்பனை செய்பவர்கள் உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

புதிய சமையல் எண்ணெய்

உணவு தயாரிப்பில் தரம் குறைந்த, சந்தேகத்திற்கிடமான மூல உணவு பொருட்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறமிகளை உபயோகிக்க கூடாது. ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடாது. சமையல் எண்ணெய் கொதி நிலையில் இருக்கும் போது, புதிய சமையல் எண்ணெயை அதனுடன் கலக்க கூடாது.

இனிப்பு பண்டங்கள் விற்பனை செய்யும் வணிகர்கள், இனிப்பு பெட்டிகளின் மீது தயாரிக்கப்பட்ட நாள் மற்றும் பயன்பாட்டு காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

புகார்

எனவே பொதுமக்கள் சுகாதாரமான முறையில் தரமான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக புகார் இருந்தால் பொதுமக்கள் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு 04142-221081 அல்லது 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


Next Story