கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது/
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக, கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற ஜூன் 4-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் 12 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறும். இது 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நீச்சல் பயிற்சி தேவைப்படும் அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கான 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,000 + (18 சதவீத ஜி.எஸ்.டி.) ஆகும். இத்தொகையினை போன்பே, ஜீபே போன்ற ஆன்லைன் செயலி வழியில் செலுத்த முடியும். நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் வரும் சிறுவர்கள் குறைந்தபட்ச உயரம் 4 அடி (120 செ.மீ) இருத்தல் வேண்டும். நீச்சல் கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாம் முதற்கட்டமாக 25-ந் தெதி தொடங்கி முதல் மே 7-ந்தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக மே 9-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக மே 23-ந்தேதி தொடங்கி ஜூன் 4-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. மேலும், தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மானாமதுரை ரோடு, சிவகங்கை என்ற அலுவலக முகவரிக்கும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.