கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

‘தகைசால் தமிழர்’ விருதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு சுதந்திர தின விழாவின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டையில் நேற்று நடந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விருதுகளைப் பெற்றவர்களின் விவரம் வருமாறு:-

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் பழைய பட்டினத்தில் 2.12.1933 அன்று பிறந்தார். போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு 40 முறை சிறைக்கு சென்றவர். விடுதலை நாளிதழின் ஆசிரியராக 60 ஆண்டுகளாக சிறப்பாக மேற்கொள்பவர். பெரியாரின் பணியை தொடந்து செய்து, தமிழினத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அப்துல் கலாம் விருது

டாக்டர் அப்துல் கலாம் விருது, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் பேராசிரியராக பணியாற்றும் வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்பட்டது. பல முக்கிய ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டவர்.

136 புத்தகங்கள், 724 ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். அறிவியல் ஆராய்ச்சித்துறையில் அவரது சேவையைப் பாராட்டி வசந்தா கந்தசாமிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

கல்பனா சாவ்லா விருது

துணிவு மற்றும் வீரசாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்விக்கு வழங்கப்பட்டது.

இமாசல பிரதேசம் குலாங்க் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் இருந்து, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்க்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தனது 9 வயதுடைய 2-வது மகளை முதுகில் கட்டிக்கொண்டும், 13 வயதுடைய மூத்த மகளை உடன் அழைத்துக்கொண்டும் கண்ணைக் கட்டிக்கொண்டு 165 அடி உயரத்தை 55 வினாடிகளில் இறங்கி சாதனை படைத்துள்ளார்.

நல் ஆளுமை விருதுகள்

காலை உணவு திட்டத்தை நிர்வகிக்க செல்லிட செயலியை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட நோயாளிகளுக்காக தனியாக 40 படுக்கை வசதிப் பிரிவை அமைத்து, அவர்களுக்கு உணவு, உடை, சிகிச்சை அளித்து அவர்களை குடும்பத்திடமோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ அனுப்ப எடுத்த முன்முயற்சிகளை பாராட்டி சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணிராஜனுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.

தாம்பரம் மாநகராட்சி

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஜெயக்குமாருக்கு, சிறந்த டாக்டர் வழங்கப்பட்டது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்காக முதல்-அமைச்சர் விருதுகளில், சிறந்த மாநகராட்சிக்கான விருதுகளை திருச்சி (முதல் பரிசு), தாம்பரம் (2-ம் பரிசு) பெற்றன. அதுபோல சிறந்த நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் விருது வழங்கப்பட்டன.

முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளை, ஆண்கள் பிரிவில் செங்கல்பட்டு ராஜசேகர் உள்ளிட்டோரும், பெண்கள் பிரிவில் சென்னை விஜயலட்சுமி, காஞ்சீபுரம் கவிதா தாந்தோனி உள்ளட்டோரும் பெற்றனர்.

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பில் சிறந்த பணிக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கத்தை, மதுரை தெற்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் உள்ளிட்டோர் பெற்று உள்ளனர்.

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி வருமாறு:-

கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது பெரியாருக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், விருதுக்கான தொகை ரூ.10 லட்சத்தை பெரியாரின் சிறப்புகளை அமைத்துக்கொண்டிருக்கக்கூடிய, 95 அடி பெரியார் சிலையும், 45 அடி அடிபாகமும் கொண்டு, திருச்சி அருகே உருவாகும் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story