சதுரகிரியில் நாளை தை அமாவாசை சிறப்பு பூஜை
சதுரகிரியில் நாளை தை அமாவாசை சிறப்பு பூஜை நடக்கிறது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.
பிரதோஷ வழிபாட்டிற்காக நேற்று காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சோதனைகளுக்கு பிறகு மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தை அமாவாசையான நாளை சதுரகிரியில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.