ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவம் ஆளும் பல்லக்குடன் நிறைவு பெற்றது. ரெங்கநாதர் கோவில்
ரெங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தைத்தேர் உற்சவத்தின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று முன்தினம் சப்தாவரணம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார்.
ஆளும் பல்லக்கு
இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்க விலாச மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார்.
அங்கிருந்து இரவு 9.30 மணி புறப்பட்டு இரவு 9.45-க்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தைத்தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.