கரந்தமலையில் இருந்து தீர்த்தகுடம் எடுத்துபக்தர்கள் ஊர்வலம்


கரந்தமலையில் இருந்து தீர்த்தகுடம் எடுத்துபக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 21 Feb 2023 7:00 PM GMT (Updated: 21 Feb 2023 7:01 PM GMT)

நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி கரந்தமலையில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

திண்டுக்கல்

தீர்த்தகுட ஊர்வலம்

தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கரந்தமலையில் இருந்து தீர்த்தகுடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடினர். அதன்பிறகு மஞ்சள் ஆடை அணிந்து அங்கிருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சந்தனகருப்பு கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ண குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக நத்தம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

விரதம் தொடங்கினர்

அதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தகுடங்கள் மூலம் கோவில் சன்னதி முன்பு தீர்த்தத்தை தெளித்தனர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். திருவிழாவையொட்டி நேற்று இரவு அம்மன்குளத்தில் இருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் சன்னதி முன்பு ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

திருவிழாவில் வருகிற 24, 28-ந்தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் நத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வருவார். மேலும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Next Story