காரில் அழைத்து சென்று ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2½ லட்சம் வழிப்பறி-கூட்டாளி கைது


காரில் அழைத்து சென்று ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2½ லட்சம் வழிப்பறி-கூட்டாளி கைது
x

சங்ககிரி அருகே காரில் அழைத்து சென்று ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2½ லட்சத்தை கத்திமுனையில் வழிப்பறி செய்த அவரது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

சேலம்

சங்ககிரி:

ரியல் எஸ்டேட் அதிபர்

சேலம் சின்ன திருப்பதி சேரன் ரோடு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 47), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருப்பூர் பகுதியை சேர்ந்த இலக்கியச்செல்வம் (33), தர்மபுரியை சேர்ந்த சிவராஜ், அவருடைய நண்பர் ரெட்டி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் சேர்ந்து கூட்டாக ஒரு சில இடங்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இலக்கியச்செல்வம், மதன்குமாருக்கு போன் செய்து சங்ககிரி அருகே ஒரு இடம் உள்ளது, அந்த இடம் நமக்கு பிடித்து இருந்தால் உடனே முன்பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி உள்ளார்.

இதையடுத்து மதன்குமார் ஏற்கனவே ஒரு இடம் விற்பனை செய்து வைத்து இருந்த பணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தார். அங்கிருந்து மதன்குமார், இலக்கியச்செல்வத்திற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு எங்கே வரவேண்டும் என கேட்டுள்ளார்.

காரில் அழைத்து சென்று பணம்பறிப்பு

உடனே சங்ககிரி அருகே களியனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அவரை வருமாறு கூறி உள்ளனர். இதையடுத்து மதன்குமார் இரவு 7-45 மணியளவில் அந்த ஓட்டலுக்கு காரில் சென்று உள்ளார். அப்போது ஓட்டலுக்கு முன்பாக காரில் காத்திருந்த இலக்கியச்செல்வம், சிவராஜ், ரெட்டி ஆகியோர், நாம் பார்க்க வேண்டிய இடம் அருகில் தான் உள்ளது என மதன் குமாரை தங்களின் காரிலேயே செல்லலாம் என கூறி உள்ளனர். இதையடுத்து ஓட்டல் பகுதியில் மதன்குமார் தனது காரை நிறுத்தி விட்டு கூட்டாளிகளின் காரில் ஏறி சென்றுஉள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் காரில் இருந்த மதன்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டிய மற்ற 3 பேரும் அவர் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்து கொண்டனர். பின்னர் மதன்குமாரை நடுவழியில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு விட்டு அவர்கள் 3 பேரும் காரில் தப்பி சென்றுவிட்டனர்.

இதில் காயம் அடைந்த மதன்குமார் சேலம் சென்று சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கூட்டாளி கைது

இந்த வழக்கு தொடர்பாக மதன்குமாரின் கூட்டாளியான இலக்கியச்செல்வத்தை கைது செய்த போலீசார் அவரது சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிவராஜ், ரெட்டி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story