வடக்கு மாமல்லபுரம் பகுதியில் குப்பை கொட்டும் இடமாக மாறிய தல்லேரி பொய்கை குளம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வடக்கு மாமல்லபுரம் பகுதியில் குப்பை கொட்டும் இடமாக மாறி சீரழிந்து காணப்படும் தல்லேரி பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வடக்கு மாமல்லபுரம் பகுதியில் உள்ள அண்ணல் காந்தி தெருவுக்கும், கிழக்கு கடற்கரை சாலைக்கும் மத்தியில் அமைந்துள்ள 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தல்லேரி பொய்கை குளம் மிகவும் பழமை வாய்ந்த குளமாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்து நீர் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. மழைக்காலங்களில் இங்கு நிரம்பும் நீரால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து கோடை காலங்களில் ஆழ்துளை கிணறுகளுக்கு ஒரு ஊற்றுபோல் நீர் வழங்கும் ஆதாரமாக இந்த குளம் விளங்கியது.
தற்போது இந்த தல்லேரி பொய்கை குளம் பராமரிப்பு இல்லாமல் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டும் இடமாக மாறி சீரழிந்துள்ளது. அதேபோல் புதர்கள் சூழ்ந்து பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துகளில் புகலிடமாகவும் திகழ்கிறது.
மது குடிக்கக்கூடியவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். சில நேரங்களில் இந்த குளத்தில் குடங்களில் நீர் எடுக்க இறங்குபவர்களின் கால்களை இந்த பாட்டில் சிதறல்கள் பதம்பார்த்து காயம் ஏற்படுத்துகிறது.
ஒரு காலத்தில் வடக்கு மாமல்லபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் பலரின் விளைநிலங்களுக்கும் இந்த தல்லேரி பொய்கை குளத்துநீர் நெற்பயிர், கேழ்வரகு, காய்கறிகள், தர்பூசணி போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது இங்குள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறிவிட்டதால் தமிழக அரசு பாரம்பரியமிக்க இந்த குளத்தை பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த குளத்தின் நான்கு புற கரை பகுதிகளும் கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதால் இந்த குளத்தின் மொத்த பரப்பளவு சுருங்கி வருகிறது. எனவே வடக்கு மாமல்லபுரம் பகுதி மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் பாரம்பரியம் மிக்க, பழமை வாய்ந்த தல்லேரி பொய்கை குளத்தை புதர்கள், குப்பைகள் அகற்றி, தூர் வாரி பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று வடக்கு மாமல்லபுரம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் தமிழக அரசுக்கும் மாமல்லபுரம் பேரூராட்சிக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.