புதர் மண்டி கிடக்கும் தாலுகா அலுவலக கட்டிடம்


புதர் மண்டி கிடக்கும் தாலுகா அலுவலக கட்டிடம்
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 11 Feb 2023 6:46 PM GMT)

புதர் மண்டி கிடக்கும் தாலுகா அலுவலக கட்டிடம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி, கிணத்துக்கடவு பிரிக்கப்பட்டு, தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலக மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில், தாலுகா அலுவலகம் செயல்பட தொடங்கியது.

கிணத்துக்கடவு தாலுகா

இங்கு பொது, சமூக பாதுகாப்பு திட்டம், தேர்தல், நில அளவை ஆகிய பிரிவுகள் ஒரே கட்டிடத்தில் உள்ளன. அதனருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் வட்ட வழங்கல், இ-சேவை மையம் மற்றும் ஆதார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு தாலுகா அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் உள்பட 80 பேர் பணியாற்றுகின்றனர். ஆனால் போதிய இடவசதி இன்றி ஆவணங்களை பாதுகாப்பதிலும், அலுவலக பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

கட்டுமான பணி நிறுத்தம்

இதையடுத்து கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று 2013-ம் ஆண்டு பஸ் நிலையம் எதிரே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ரூ.2 கோடியே 22 லட்சம் செலவில் புதிய கட்டிடம் மற்றும் தாசில்தார் குடியிருப்பு கட்டும் பணி தொடங்கியது. இந்த பணி, 2014-ம் ஆண்டில் இறுதி கட்டத்தை எட்டியது.

இதற்கிடையில் கோவில் நிலத்தில் தாலுகா அலுவலகம் கட்டப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சுமார் 9 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதால், அந்த கட்டிடத்தை புதர் சூழ்ந்து விட்டது. மேலும் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. மறுபுறம், இடவசதி இல்லாத தற்போதைய தாலுகா அலுவலகத்தில் கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்து மழைநீர் ஒழுகி வருகிறது. எனவே புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

யாருக்கு பயன்?

பிரபாகரன்(கிணத்துக்கடவு):

தனி தாலுகாவாக கிணத்துக்கடவு அறிவிக்கப்பட்ட வேகத்தில், புதிய கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென பணியை நிறுத்திவிட்டனர். இதனால் பழைய அலுவலகத்திலேயே தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. அங்குள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேற்கூரை வழியாக மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும்.

நவீன்குமார்(முத்துக்கவுண்டனூர்):

கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கட்டப்பட்ட புதிய தாலுகா அலுவலகம், புதர் மண்டி வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. மேலும் சமூக விரோதிகள் மற்றும் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் யாருக்கு என்ன பயன்?.

இந்து சமய அறநிலையத்துறையிடம் இருக்கும் அந்த நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கி வருவாய்த்துறை கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்.

இட நெருக்கடி

பிரகாஷ்(சொலவம்பாளையம்):

பழைய தாலுகா அலுவலகத்தில், முதல் தளத்தில் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். அங்கு மாற்றுத்திறனாளிகள் ெசன்று, அலுவலர்களை சந்திக்க சாய்வு தள வசதி இல்லை. ஆனால் புதிய தாலுகா அலுவலகத்தில் அந்த வசதி உள்ளது. மேலும் இட நெருக்கடிக்கு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. எனவே புதிய அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும்.

சோபனா(அரசம்பாளையம்):

தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டும் கிணத்துக்கடவில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. ஒரு கோர்ட்டு கூட இல்லை. கிணத்துக்கடவுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட மதுக்கரை தாலுகாவில் கூட அனைத்து கட்டமைப்புகளும் ஏற்பத்தப்பட்டு விட்டது. ஆனால் கிணத்துக்கடவில் புதிய தாலுகா அலுவலகம் கூட இன்னும் திறக்கப்படவில்லை. பெயரளவுக்கு மட்டும் தாலுகாவாக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.


Next Story