துப்பாக்கி முனையில் தாம்பரம் ரவுடி கைது


துப்பாக்கி முனையில் தாம்பரம் ரவுடி கைது
x

10 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தாம்பரம் ரவுடியை ராஜபாளையத்தில் துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சைலு என்ற சைலேந்தர். தாம்பரம் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது தாம்பரம், சேலையூர், பீர்க்கன்காரணை, கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, குன்றத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 6 கொலை வழக்குகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏ பிளஸ் ரவுடிகள் பட்டியலில் சைலேந்தர் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் மீது 10 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு, சுமார் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

துப்பாக்கி முனையில் கைது

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுரையை அடுத்த ராஜபாளையத்தில் பதுங்கி இருந்த தாம்பரம் ரவுடி சைலேந்தரை, தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சமீபத்தில் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடிகள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகியோரின் தலைவனாக இருந்தவர் சைலேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story