தமிழ் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்: கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
தமிழ்மரபு, பண்பாட்டை பாதுகாத்து அடுத்துவரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். தொடர்ந்து, மாணவ- மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்திற்கு தற்போது பெருமை வாய்ந்த நிகழ்வாகும். ஏனென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், நமது மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் மிகவும் பெருமைபடக்கூடிய நிகழ்வாக உள்ளது. அவர் மாநில பாடப்பிரிவில் கல்வி பயின்று இன்றைய தினம் உலக நாடுகளே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டுள்ளார். ஆகவே மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் இதுபோன்றதொரு சிறந்த நிலையை அடையலாம். அதற்கு தங்களின் விடாமுயற்சி இன்றியமையாததாக இருக்க வேண்டும். தங்களின் முயற்சி வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மாபெரும் தமிழ்க்கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே, உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் பழமைவாய்ந்தது.
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதல், தமிழர் பண்பாட்டில் கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை வளரும் இளம்தலைமுறையினருக்கு உணர்த்துவதே ஆகும். மாணவர்களாகிய உங்களிடம் இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நீங்கள் அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல நல்வாய்ப்பாக அமையும். அதோடு நமது பண்பாட்டின் உயர்ந்த தகவல்கள் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு நீடித்து நிலைத்திருக்கும்.
எனவே ஒவ்வொருவரும் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் பெருமிதம், கலாச்சாரம், வரலாறு, வாழ்வியல் நெறிமுறைகள், தொழில்நுட்ப அறிவுக்களஞ்சியம், இன்னபிற செய்திகளை தெரிந்துகொள்வதோடு அடுத்து வரும் இளம்தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 'மாபெரும் தமிழ்க்கனவு" நிகழ்ச்சியில் பெருமிதம் வாசிப்பு மற்றும் கேள்வி நாயகன், நாயகி என்ற தலைப்பில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பழனி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், தெய்வானை அம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அகிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் என்று பலர் கலந்துகொண்டனர்.