குமாரபாளையத்தில் தமிழ் கனவு விழா-கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் மாபெரும் தமிழ் கனவு விழா கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.
மாபெரும் தமிழ் கனவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும், வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கொண்டு செல்லவும், பண்பாட்டின் முக்கிய கூறுகளான கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை உணர்த்தவும், தமிழ்நாடு முழுவதும் 100 கல்லூரிகளில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தமிழர் மரபு, நாகரிகம், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசை தோறும் திராவிடம், மொழி, இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும், கணினி தமிழ் வளர்ச்சியும், அதன் சவால்களும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்வி புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள், செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவு நடைபெறுகிறது.
தமிழின் முக்கியத்துவம்
அந்த வகையில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியானது நாமக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பாவை கல்லூரியிலும், மார்ச் 16-ந் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியிலும் நடைபெற்றது. இதன் மூலம் தமிழின் முக்கியத்துவம், வரலாறு மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்லபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சிலப்பதிகார தமிழ்நாடு என்ற தலைப்பில் மெய்யியலாளர் கரு.ஆறுமுகத்தமிழன், அரை நூற்றாண்டு ஆட்சியில் தமிழ்நாடு பெற்றதும், இழந்ததும் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆகியோர் பேசினர். இதில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) செல்வி, குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி தாளாளர் நடேசன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.