அரியலூரில் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி
அரியலூரில் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
அரியலூரில் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிதமிழரின் கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை உணர்த்திடும் பொருட்டு "மாபெரும் தமிழ் கனவு" என்கிற தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு சொற்பொழிவு நிகழ்ச்சி தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. பெண்ணுக்குள் ஞான ஒளி, கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்ட வரலாறு ஆகிய தலைப்புகளின் கீழ் கவிஞர்கள் நந்தலாலா, யாழினி ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்ச்சியில் தமிழ் பெருமிதம், மாபெரும் தமிழ் கனவு காணொளி, நோக்கவுரை, முதல் சொற்பொழிவு, கேள்வி-பதில் பகுதி, 2-ம் சொற்பொழிவு, கேள்வி-பதில் பகுதி, பரிசளிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. மேலும், புத்தக காட்சி, நான் முதல்வன் திட்டம், வேலை வாய்ப்பு அலுவலகம், உயர் கல்வி வழிகாட்டுதல், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் பிற துறை அரங்குகளும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள், இளைய தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு நமது பண்பாட்டின் பெருமையை அறிந்து கொண்டு, அடுத்து வரும் சந்ததியினருக்கு இதனை கொண்டு செல்ல வேண்டும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.