அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு திட்ட நிகழ்ச்சி
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு திட்ட நிகழ்ச்சியை கலெக்டர் மெர்சி ரம்யா, அப்துல்லா எம்.பி. தொடங்கி வைத்தனர்.
தமிழ் கனவு திட்ட நிகழ்ச்சி
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:- தமிழ் கனவு நிகழ்ச்சியானது 2023 ஜூலை மாதம் முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்களிடையே இத்தகைய நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் தமிழர் மரபு, பண்பாடு, சமத்துவ வளர்ச்சி ஆகியவற்றில் ஆர்வமும், அக்கறையும் தூண்டப்பட்டு ஓர் ஆரோக்கியமான எதிர் காலம் உருவாகும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
புத்தகக் காட்சி
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில், 200 சொற்பொழிவுகள், 1,000 கல்லூரிகளை சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெற வேண்டும். மேலும், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகக் காட்சி அரங்கும் உள்ளது. மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
பாராட்டு சான்றிதழ்
இதையடுத்து அப்துல்லா எம்.பி. பேசுகையில், சமூகநீதி, பொருளாதாரமும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேசினார். மேலும் நிகழ்வில் சிறந்த வினாக்களை வினவிய 5 மாணவர்களுக்கு கேள்வியின் நாயகன், நாயகி எனப் பாராட்டி சான்றிதழ் மற்றும் நூல்களை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ராஜ்மோகன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.