அரசு கலைக்கல்லூரியில் தமிழ் மன்ற விழா
அரசு கலைக்கல்லூரியில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது.
கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று தமிழாய்வு துறை மற்றும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையும் இணைந்து தமிழ் மன்ற விழாவை நடத்தியது. இதற்கு கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கரூர் பெரிய குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முரளி கலந்துகொண்டு, தமிழ் மொழியின் பெருமைகளையும், தமிழ் கற்பித்த சான்றோர் பெருமக்களையும் நினைவு கூர்ந்து மாணவ மாணவிகள் தங்களது வெற்றிக்கு தமிழ்மொழி ஏற்படுத்தும் தன்னம்பிக்கை குறித்தும் பேசினார். தமிழ்த்துறை தலைவரும், தேர்வு நெறியாளருமான கற்பகம் வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து தமிழ் மன்றத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தமிழ் மன்ற மாணவர் குழு பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் மன்றத்தின் குழு உறுப்பினர்களாக கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர்கள் செயல்பட உள்ளனர். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.